ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை: உலக மருத்துவர் தினத்தையொட்டி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, குழந்தைகள் நலப்பிரிவில் 40 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 100 சாதாரண படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார். தொடர்ந்து, 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி, பொதுமக்களுக்கான கழிவறைகளை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,  வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை  முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு,  கல்லூரி முதல்வர் பாலாஜி, குழந்தைகள் நலத்துறை இயக்குநர் கணேஷ், நிலைய  மருத்துவ அலுவலர் ரமேஷ், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, துறை  பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 80 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை 6 மாதத்திற்கு அப்படியே வைத்திருக்கப்படும். குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், படிப்படியாக மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: