சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுக வேட்பாளர் மகனிடம் 3 கோடி கொடுத்தது யார்? அதிமுக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு

திருச்சி: திருச்சியில் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகனிடம் 3 கோடி கொடுத்து அனுப்பியது யார் என்பது பற்றி அதிமுக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். திருச்சி பெட்டவாய்த்தலையில் கடந்த மார்ச் 23ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி சாமி ரவி, தனது கூட்டாளிகளுடன் காரில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியை கொள்ளையடித்து சென்றார். பணம் எடுத்துச்செல்லப்பட்ட கார் அப்போது முசிறி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வராசுவின் மகனுக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் சாமி ரவியின் கூட்டாளிகளான பிரகாஷ், மணிகண்டன், சிவா, சதீஷ்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த சாமி ரவி கடந்த 17ம் தேதி அருப்புக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.65 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், 2 கோடி கொள்ளை தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: ஜீயபுரத்தை சேர்ந்த அதிமுக மீனவரணி செயலாளர் கண்ணதாசன் என்பவரது வீட்டிலிருந்து முன்னாள் அதிமுக எம்எல்ஏ மகனின் காருக்கு 3 கோடி கைமாறியுள்ளது. இதுதெரிந்த கண்ணதாசனின் தம்பி சதீஸ்குமார், அவரது அக்கா மகன் திலீப்குமார் மூலம், தேர்தலுக்கு கொண்டு வரப்பட்ட பணம். இது கணக்கில் வராது. அதனால் இதை கொள்ளையடித்தாலும் சம்பந்தப்பட்டவர் வெளியில் சொல்லமுடியாது என திட்டமிட்டு, அந்த பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து திலீப்குமார் பிரபல ரவுடியான சாமிரவியை தொடர்புகொண்டு திட்டம் பற்றி கூறியுள்ளார். அதன்படி அவர்கள்  காரில் கொண்டு வந்த 3 கோடியில் 2 கோடியை கொள்ளையடித்துள்ளனர்.

Related Stories: