பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு ஒன்றிய அரசை கண்டித்து 6ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் அறமற்ற செயலை கண்டித்து வரும் 6ம்தேதி மமக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் இருக்கும் இந்த நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் உயர்த்துவதை வாடிக்கையாக ஒன்றிய அரசு செய்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்திருப்பது மிகப்பெரிய அவலம்.

மாநில அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பாஜ அரசு ஏற்கனவே பறித்து விட்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொதுமக்கள் மீது திணிப்பது என்பது அறமற்ற செயல். இதனைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஜூலை 6ம் தேதி கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நடைமுறையில் உள்ள மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தனி நபர் இடைவெளியை கடைபிடித்து முக்கவசம் அணிந்து நடைபெற உள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: