தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வெளிநோயாளிகள் பிரிவு மீண்டும் செயல்படும்: இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி தகவல்

சென்னை: தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வெளிநோயாளர் சேவைகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என்று இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: கடந்த மே 1ம் தேதி முதல் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வெளிநோயாளர் பிரிவு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் இந்த மருத்துவமனை 100 படுக்கைகள் கொண்ட சித்தா கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 500 கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த மையத்திற்கு வரும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இன்று முதல் குறைந்த பட்ச செயல்பாட்டுடன் அரசு அறிவுறுத்திய கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி மறுபடி துவங்கப்படும். முதியோர்கள், குழந்தைகள் மற்றும் இணைநோயுடையோர் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்த்தல் நல்லது. அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் ஆகியவை, அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள் மூலம் வெளிநோயாளர் பதிவு அட்டைகளை புதுப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: