திருவாரூர் அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்ட ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயலில் கச்சா எண்ணெய் பரவியது: நெல் விதைத்த 1 ஏக்கர் நிலம் சேதம்

மன்னார்குடி: திருவாரூர் அருகே பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததால் வயலில் கச்சா எண்ணெய் பரவியதால் நெல் விதைக்கப்பட்ட 1 ஏக்ககர் நிலம் சேதமானது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த ஆதிச்சபுரம் ஊராட்சியில் ஓஎன்ஜிசி சார்பில் பிளாண்ட் அமைத்து கச்சா எண்ணெய், காஸ் எடுக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கிருந்து நல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக பூமிக்கு அடியில் 6 அடி ஆழத்தில் 15 கிமீ தூரத்திற்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார்குடி அடுத்த மேலப்பனையூர் ஆறுகாணி பகுதியில் விவசாயி சிவக்குமார் 1 ஏக்கர் வயலில் குறுவை சாகுபடிக்காக நெல் விதைப்பில் ஈடுபட்டார். விதை விதைத்து 10 நாட்கள் ஆவதால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று காலை சிவக்குமார் சென்ற போது அவரது வயலுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் வயல் முழுவதும் பரவி இருந்தது. இதையடுத்து ஆதிச்சபுரத்தில் உள்ள ஓஎன்ஜிசி அதிகாரிகள் மற்றும் கோட்டூர் காவல் நிலையத்திற்கு சிவக்குமார் தகவல் தெரிவித்தார். ஓஎன்ஜிசி அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக கச்சா எண்ணெய் அனுப்புவதை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து கசிவு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு இரும்பு குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

Related Stories: