தமிழகத்தில் முதன்முறையாக ஊட்டியில் பழங்குடியின பெண்களால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு

ஊட்டி:  ஊட்டி  அருகே முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியின  பெண்களால்  நடத்தப்படும் பெட்ரோல் பங்க் செயல்பட்டு  வருகிறது.  நீலகிரி  மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர்,  பனியர், காட்டு  நாயக்கர் உள்ளிட்ட 6 வகை பழங்குடியின மக்கள் வசித்து  வருகின்றனர்.  மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை ஒப்பிடும் போது  இவர்களின் எண்ணிக்கை  மிக குறைவே.  மாவட்டம் முழுவதும் 27,032 பேர்  மட்டுமே உள்ளனர்.    இவர்களில் இருளர், பனியர்,  குறும்பர், காட்டு நாயக்கர்  ஆகிய பிற பழங்குடியின மக்கள், சுதந்திரம்  பெற்று 70 ஆண்டுகளாகியும் கல்வி,  வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறவில்லை.  இன்றும் விவசாய கூலிகளாக வாழ்க்கை நடத்தி  வருகின்றனர். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசும்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்தொடர்ச்சியாக, ஊட்டி அருகே  முத்தோரை பாலாடா பகுதியில் அமைந்துள்ள  பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின்  சார்பில் மையத்தின் அருகில்  புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு  பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  மாவட்டத்தில் உள்ள 6 பழங்குடியினரை  உள்ளடக்கி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு  பழங்குடியினத்தில் இருந்தும் 2   பெண்கள் என 12 பெண்கள்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில்  பணியாற்றி  வருகின்றனர். இவர்களுக்கு 8 மணி நேர பணி. 8 மணி நேரத்துக்கு மேல்  பணி  செய்தால், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முத்தோரை பாலாடா சுற்று   வட்டார பகுதிகளில் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாய நிலங்கள் உள்ளதால்,   விளை பொருட்களை எடுத்து செல்லும் லாரி, ஜீப் ஆகிய வாகனங்கள் இந்த   பங்கிலேயே எரிபொருட்கள் நிரப்பி கொள்கின்றனர். தமிழகத்தில் பழங்குடியினரால்   நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க்காக இது விளங்கி வருகிறது என்பது   குறிப்பிடத்தக்கது.

Related Stories: