சிவகாசி அருகே வெடி விபத்து நடந்ததாக கூறிய ஆலையில் விதிமீறி பட்டாசுகள் தயாரிப்பு-சப்கலெக்டர் கண்டுபிடித்து சீல் வைத்தார்

சிவகாசி : சிவகாசி அருகே வெடி விபத்து நடந்ததாக கூறிய ஆலையில் விதிமீறி பட்டாசுகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சப்கலெக்டர் ஆலையை சீல் வைத்தார்.

சிவகாசி பழனியாண்டவர் காலனியை சேர்ந்தவர் சங்கர் (55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, சிவகாசி அருகே உள்ள சித்தமநாயக்கன்பட்டியில் உள்ளது. நாக்பூர் லைசென்சுடன் இயங்கி வரும் இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று காலை இந்த ஆலையில் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினரக்கு தகவல் கிடைத்தது. சிவகாசி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிவசாகி சப்-கலெக்டர் பிருத்விராஜ் மற்றும் அலுவலர்கள் பட்டாசு ஆலைக்கு சென்றனர். ஆனால் அங்கு விபத்து எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

 இதனையடுத்து பட்டாசு ஆலையில் ஒவ்வொரு அறையாக சென்று சப்-கலெக்டர் பிருத்விராஜ் ஆய்வு செய்தார். இதில் விதிகளை மீறி கூடுதல் வெடி பொருட்கள் வைத்திருந்ததும், திறந்தவெளியில் பட்டாசுகளை உலர வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சப்-கலெக்டர், விதிமீறிய பட்டாசு ஆலைக்கு உடனடியாக சீல் வைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனித்தாசில்தார் சிவஜோதி, பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தார். முன்னதாக இந்த ஆலையில் வெடி விபத்து நடந்ததாக செய்தி டிவிக்களில் ஒளிபரப்பானது. இதை கண்டு ஆலையில் வேலை பார்த்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி ஆலையில் வெடி விபத்து ஏதும் நடக்கவில்லை என தெரிவித்தனர். எனினும் அவர்கள் செல்ல மறுத்து ஆலை முன்பே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணியில் சேர்ந்த முதல்நாளிலே அதிரடி

சிவகாசி சப்-கலெக்டராக பிரித்விராஜ் நேற்று தான் பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்த முதல் நாளே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல் வைத்துள்ளார் என்பது

குறிப்பிடத்தக்கது.

Related Stories: