வேலூர் கோட்டையில் 73 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி-அருங்காட்சியகங்களுக்கு பார்வையாளர்கள் வருகை

வேலூர் : வேலூர் கோட்டையில் 73 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் அருங்காட்சியங்களை பார்வையிட ஏராளமானோர் வந்தனர்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் வேகமாக பரவியது. இதனால் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியங்கள் உட்பட அனைத்தும் கடந்த ஏப்ரல் 16ம்தேதி முதல் முதல் மூட உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்ளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி வேலூர் கோட்டை மற்றும் கோயில், அருங்காட்சியகம் உட்பட அனைத்தும், மேல்பாடி சுப்ரமணியன் கோயில் ஆகியவை மூடப்பட்டது. வேலூர் கோட்டையின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. மேலும் காந்தி சிலை அருகே பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு வேலி போடப்பட்டது. பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் அங்கு தொல்லியல் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் வேலூர் கோட்டை வெறிச்சோடியது.

இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் தொல்லியல் துறை நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியங்கள் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வேலூர் கோட்டையை 73 நாட்களுக்கு பிறகு நேற்று காலை சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. காலை நேரத்தில் குறைவாக இருந்தனர். பின்னர் மதியம் முதல் அதிகமாக பொதுமக்களும் கோட்டைக்குள் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதியை தொடர்ந்து வேலூர் கோட்டையில் இன்று முதல் ெபாதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி. கோட்டைக்குள் உள்ள அரசு அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். மேலும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிடலாம். ஆனால் அரசு உத்தரவு வரும் வரை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகை கடைகள், ஜவுளிக்கடைகள் திறப்பு

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதில் நகை கடைகள், ஜவுளிக்கடைகள் போன்ற பல்வேறு கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் அனைத்து நகை கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் ஒருசில கடைகளை தவிர பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரவில்லை. இதனால் வெறிச்சோடியது.

Related Stories: