ஜவ்வாதுமலையில் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும்-திருவண்ணாமலை எஸ்பி வலியுறுத்தல்

போளூர் :  ஜவ்வாதுமலையில் நடைபெறும் குழந்தை திருமணங்களை கட்டாயம் தடுத்து நிறுத்த அனைவரும் முயற்சிக்க வேண்டும் என திருவண்ணாமலை எஸ்பி அ.பவன்குமார் வலியுறுத்தி பேசினார். திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் சைல்டு லைன், மாவட்டம் துணை மையம் சார்பில் விழிப்புணர்வு  கூட்டம் ஜமுனாமரத்தூர்  தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் திருவண்ணாமலை கூடுதல் எஸ்பிக்கள் வி.கிரண்ஸ்ருதி, எஸ்.ராஜாகாளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட இயக்குநர் செ.முருகன் வரவேற்றார்.  

கூட்டத்தில், ஜவ்வாதுமலை பகுதியில் நடைபெறும் குழந்தை திருமணம் குறித்தும், அதனை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட சமூக நல அலுவலர் பி.கந்தன், மாவட்ட குழந்தைகள் பாதகாப்பு அலுவலர் எஸ்.செல்வி ஆகியோர் பேசினர்.  

 திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அ.பவன்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: ஜவ்வாதுமலை பகுதியில் மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். எனவே தங்களது கலாசாரமாக இந்த பகுதியில் 18 வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக பலரும் பேசினார்கள். இதற்கு காரணம் எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் திருமணம் செய்து வைப்பது எங்கள் உரிமை என இங்குள்ள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் குழந்தை திருமணங்களை நடத்துவது சட்டப்படி குற்றம் என்பதோ, அதை செய்தால் சிறைக்கு போக வேண்டும் என்பது பற்றியோ இவர்களுக்கு தெரியாததே காரணம்.

மலைவாழ்மக்கள் என்பதால் அவர்கள் மீது மென்மையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் தாங்கள் செய்வது பெரிய குற்றம்  என தெரியாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே இது பற்றி மிக பெரியளவில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும்.  நமக்கென்ன வந்தது என அனைவரும் ஒதுங்கி கொள்ளும் மனநிலை மக்களிடம் இருப்பதால் தான் குற்றம் செய்பவர்களுக்கு மன தைரியத்தை தருகிறது. அந்த மனநிலை மாறவேண்டும். குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த அனைவருக்கும் சமூக அக்கறை வேண்டும்.

 இந்த பகுதியில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோர்களுக்கும்  காவல்துறையினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை உடனே தடுப்பதற்கு  உங்களால் மட்டுமே முடியும்.  மேலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் இவர்களுக்கு தெரியாமல் குழந்தை திருமணம் நடைபெற வாய்ப்பில்லை. தகவல் தெரிந்தும் புகார் தராமல் இருக்க கூடாது. போலீஸ் துறை என்றால் குற்றங்களை தடுப்பதே மட்டுமே வேலை என்ற நிலை இப்போது மாறியுள்ளது.

 மக்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்ய போலீசார் தயாராக இருக்கின்றனர். இங்குள்ள மலைவாழ் பெண்கள் கல்வியில் வேகமாக முன்னேறி வருவதை பாராட்டுகிறேன். அவர்களுக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன். மேலும் ஜவ்வாதுமலையில் நடைபெறும் சமூக குற்றங்கள் குறித்து நாங்கள் புதியதாக வெளியிட்டுள்ள ஹலோ திருவண்ணாமலை போலீஸ் எண்ணிற்கு (99885 76666) யார் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம்.   இவ்வாறு பேசினார்.   இதில் ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் நல உறுப்பினர் எம்.புவனேஸ்வரி, டிஎஸ்பி எம்.அறிவழகன்,  தாசில்தார் ரா.சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜமுனாமரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ம.முருகன் நன்றி கூறினார்.

Related Stories: