ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு: ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்

ஜம்மு: ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. விமான நிலையம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மூத்த அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஜம்மு விமானப் படை நிலையத்தின் தொழில்நுட்பப் பகுதியில் இன்று அதிகாலை குறைந்த சக்தி கொண்ட இரண்டு குண்டுகள் வெடித்தன. ஒரு குண்டுவெடிப்பு கட்டடத்தின் மேற்கூரையில் லேசான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொன்று திறந்தவெளியில் வெடித்தது. 

இதனால், எந்தவொரு சாதனமும் சேதமடையவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பால் எந்தவொரு விமானமும் சேதமடையவில்லை. இரண்டு பணியாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) உயர் மட்ட விசாரணைக் குழு விரைவில் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்த உள்ளது. வெஸ்டர்ன் ஏர் கமாண்டர் ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி ஜம்மு விமானநிலையத்தை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். இந்த சம்பவம் குறித்து அவருக்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories: