பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பொது நலச்சங்க  நிர்வாகிகளிடம் குறைகேட்கும் முகாம் நங்கநல்லூரில் நேற்று நடந்தது. ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக  செயலாளர் என்.சந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக தொழில் துறை அமைச்சர்   தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி எம்பி  ஆகியோர் பங்கேற்று, பொதுமக்கள் மற்றும் நலச்சங்க நிர்வாகிகளின் குறைகளை மனுக்களாக பெற்றனர்.

பின்னர், முகாமிற்கு வந்த சம்மந்தபட்ட துறை அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்து, ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.  நிகழ்ச்சியில், அமைச்சர்  தா.மோ.அன்பரசன் பேசும்போது, ‘ஒவ்வொரு பகுதியிலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மக்களின் குறைகளை கேட்டறிந்து  உடனடி நடவடிக்கை  எடுக்கப்படும்.

மனை பட்டா வழங்க  அதிகாரிகள் நடவடிக்கை  எடுப்பார்கள், உடைந்த மின்கம்பஙகள், தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் விரைவில் மாற்றப்படும். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று  ஆதம்பாக்கம், ஆலந்தூர் பகுதியில் செயல்படும்  2  டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும். ஆலந்தூரில் நிறுத்தப்பட்ட 17 பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும். ஆக்கிரமிப்புகள்  உடனடியாக அகற்றப்படும்.  உங்கள் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து  சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்  உங்களுக்கு தகவல் அனுப்புவார்கள்,’ என்றார். முகாமில், மண்டல செயற் பொறியாளர்கள் முரளி, ராஜசேகர், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஜான்சிராணி, வருவாய் துறை, நெடுஞ்சாலை, மின்வாரியம், திமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், பூபாலன் கிரிஜா பெருமாள், இப்ராஹிம், ஜெ.நடராஜன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: