சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நூதன முறையில் கொள்ளையடித்த மற்றொரு கொள்ளையன் வீரேந்தர் அரியானாவில் கைது!: தனிப்படை போலீசார் அதிரடி..!!

அரியானா: சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் அரியானாவை சேர்ந்த மற்றொரு கொள்ளையன் வீரேந்தர் என்பவனை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர். சென்னை நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் உள்ள சி.டி.எம். இயந்திரங்களில் வடமாநிலத்தை சேர்ந்த மர்மக்கும்பல் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்தனர். 

குறிப்பாக ராமாபுரம், சின்மயா நகர், பாண்டி பஜார், வடபழனி, வேளச்சேரி, தரமணி, கீழ்ப்பாக்கம், பெரியமேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் வடமாநில கும்பல் கைவரிசை காட்டினர். இதனையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 5 நாட்களாகவே ராஜஸ்தான், அரியானா, டெல்லி ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்தனர். முதலில் இந்த சம்பவம் தொடர்பாக அரியானாவை சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவனை கைது செய்து சென்னை அழைத்து வந்து 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் அமீர் அர்ஷின் கூட்டாளியான வீரேந்தரை அரியானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ட்ரான்சிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மற்ற கொள்ளையர்களை தேடும் பணியும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

காவலில் உள்ள ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷிடம்  விசாரணை மேற்கொண்டதில், சென்னையில் 6 இடங்களில் கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 6 இடங்களில் நண்பர் வீரேந்தருடன் சேர்ந்து சி.டி.ஏம். எந்திரங்களில் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளான்.

Related Stories: