தாளவாடி அருகே சாலையின் மாமரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

சத்தியமங்கலம் : தாளவாடி மலைப் பகுதியில் பழமை வாய்ந்த மரம் சாலையின் குறுக்கே  விழுந்ததால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.  நேற்று காலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்டாபுரம் அருகே பழமையான மாமரம் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் மலைகிராம மக்கள் தாளவாடிக்கு செல்லமுடியாமல் தவித்தனர்.

தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சாலையில் விழுந்த மரத்தை மரம் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். தாளவாடி மலைப்பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்த நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மரம் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது.

Related Stories: