இந்த மாதத்தில் 12வது நாளாக விலையேற்றம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டியது: சென்னையில் 98.88 ஆக உயர்வு

சேலம்: நாடு முழுவதும் நேற்று 12வது நாளாக பெட்ரோல், டீசல் விலையேற்றப்பட்ட நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டியது. சென்னையில் 98.88 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100ஐயும், ஒரு லிட்டர் டீசல் 98ஐயும் தாண்டியுள்ளது.  இம்மாதத்தில் 12வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் 23 காசும், டீசல் 6 காசும் அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் இம்மாதம் பெட்ரோல் லிட்டருக்கு 2.89ம், டீசல் 2.78ம் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் 98.65க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 23 காசு உயர்ந்து 98.88க்கு விற்கப்பட்டது. டீசல் 92.83ல் இருந்து 6 காசு உயர்ந்து 92.89க்கு விற்பனையானது. சேலத்தில் பெட்ரோல் 99.69க்கும், டீசல் 93.61க்கும் விற்பனையானது.

 தமிழகத்தில் கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திண்டுக்கல், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ெபட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்டது. இதில், மிக அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 100.91க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களை பொறுத்தமட்டில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 99ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 98.88 என்ற நிலையில் இருக்கிறது. இன்னும் ஒருநாள் விலையேற்றம் ஏற்படும் பட்சத்தில், தமிழகத்தில் 30க்கும் அதிகமான மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100ஐ எட்டும் நிலை உருவாகியுள்ளது.

இதேபோல், டீசல் விலை 11 மாவட்டங்களில் 94ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் ஒரு லிட்டர் டீசல் 94.84க்கு விற்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் 93க்கு மேல் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விலையேற்றத்தை கட்டுப்படுத்தாமல் மத்திய பாஜ அரசு மவுனமாக இருப்பதை அனைத்து தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

Related Stories: