காஷ்மீர் தலைவர்களுடனான ஆலோசனை நிறைவு: பிரதமரிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்ததாக குலாம் நபி ஆசாத் தகவல்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் இன்னும் சில விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தொகுதி மறுவரையறை செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மாநிலம் பிரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில், காஷ்மீரின் எதிர்காலம் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் மோடி இல்லத்தில் உயர்மட்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்குமாறு 8 காஷ்மீர் கட்சிகளைச் சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் உள்ளடக்கிய குப்கர் கூட்டணி தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும், ஜம்மு காஷ்மீர் மக்களின் நில உரிமையை உறுதி செய்ய வேண்டும், காஷ்மீர் பண்டிட்டுகள் கவுரவத்துடன் சொந்த மண்ணுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: