கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தப்பட்ட 4266 மதுபாட்டில்கள் பறிமுதல்

*சாக்கடையில் ஊற்றி அழிப்பு

மொடக்குறிச்சி : ஊரடங்கு காலத்தில் கள்ளத்தனமாக விற்பனைக்குக் கொண்டுவந்த கர்நாடகா, பாண்டிச்சேரி மாநில 4266 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் நேற்று கீழே ஊற்றி அளித்தனர். கொரோனாவால்  அரசு தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதையடுத்து காய்கறி வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மூலம் கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்து கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்து வருகிறார்கள்.

இது குறித்து தகவல் தெரிந்ததும் ஈரோடு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் எஸ்ஐ நந்தகுமார் கொண்ட குழுவினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வந்தனர். இதில் கடந்த மே மாதம் முதல் ஒரு மாதமாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4255 கர்நாடக மது பாட்டில்களும், 11 பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 4266 மதுபாட்டில்களை நேற்று மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ், கலால் உதவி கோட்ட அலுவலர் குமரேசன் மற்றும் போலீசார் மதுபாட்டில்களில் இருந்த மதுவை அங்குள்ள சாக்கடையில்  ஊற்றி அழித்தனர்.

Related Stories: