தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இலவச மளிகை பொருட்கள் 47.16 சதவீதம் வினியோகம்

வேலூர்: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இலவச மளிகை பொருட்கள் 47.16 சதவீதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரத்தை குறைக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு, அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூ4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து முதல் தவணை ரூ2 ஆயிரம் வழங்கியது. தொடர்ந்து 2ம் தவணையாக ரூ2 ஆயிரம், கொரோனா சிறப்பு நிவாரணமாக 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கான டோக்கன் கடந்த 11ம் தேதி முதல் வீடு, வீடாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் இலவச மளிகை பொருட்கள் மற்றும் ரூ2 ஆயிரம் வழங்கும் பணி ரேஷன் கடைகயில் தொடங்கியது. ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று வரை மொத்தம் 47.16 சதவீதம் பேருக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண பொருட்களாக 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கார்டுகளுக்கு ஏற்ப பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சில மாவட்டங்களில் பொருட்கள் கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 9 லட்சத்து 55 ஆயிரத்து 214 ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் 98 லட்சத்து 82 ஆயிரத்து 903 கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் ரூ2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை 47.16 சதவீதம் மளிகை பொருட்கள், பணம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: