இரட்டை முகக்கவசம் அணிவித்து சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ஏன் நடத்தக் கூடாது ? : உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி:கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இரட்டை முகக்கவசம் அணிய வைத்து ஏன் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வினை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது.கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேநேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்வதற்கு என சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் தரப்பில் அமைக்கப்பட்ட 13பேர் கொண்ட குழுவானது உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கையை தாக்க செய்தது. அதில், பத்தாம் வகுப்பு. பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சார அடிப்படையில், அதாவது வெயிட்டேஜ் முறையில் சிபிஎஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண்களாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட மதிப்பெண் கணிக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களானது நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் , மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமாக இந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் இருக்கிறது. அதனால் வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் முறையை மாணவர்கள் விரும்பவில்லை. அதில் அவர்களுக்கு திருப்தியும் கிடையாது. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக தான் கருதுகிறார்கள். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை முகக்கவசம் அணிய வைத்தும், அதிகப்படியான மையங்களை அமைத்தும், கொரோனா பாதுகாப்பு விதைகளை பின்பற்றியும் தேர்வுகளை கண்டிப்பாக நடத்தலாம், என வாதிட்டார்.

 இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ ஆகிய நிர்வாகங்களை ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் என்று தனித்தனியாக தரம் பிரித்து பார்க்க முடியாது. இருப்பினும் இதில் உடனடியாக இறுதி முடிவு எடுக்க வேண்டியுள்ளது. மேலும் இதுகுறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: