ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைக்கு அழைத்து வந்து இலங்கை தமிழர்கள் 4 பேரிடம் மங்களூர் போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: மர்மப்படகு மூலம் கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 4 பேரை மங்களூர் தனிப்படை போலீசார் வேதாளை அழைத்து வந்து விசாரித்தனர். இலங்கை, புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழர் 34 பேர் மர்மப்படகில் கனடா செல்ல திட்டமிட்டனர். மே 27ம்தேதி புத்தளம் கடற்கரையில் புறப்பட்டு 28ம் தேதி அதிகாலை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை வந்தனர்.  இங்கிருந்து மங்களூரு சென்று கடல் வழியாக கனடா தப்பிச்செல்ல முயன்ற 34 பேரையும், ஜூன் 11ல் மங்களூரு போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேரை மட்டும் போலீஸ் காவலில் எடுத்த மங்களூரு போலீசார், அவர்களை மண்டபம் அருகே வேதாளை கடற்கரைக்கு நேற்று அழைத்து வந்தனர்.

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரையில் வந்து இறங்கியது எப்படி, மரைக்காயர்பட்டினத்தில் அடைக்கலம் கொடுத்தவர் வீட்டில் தங்கி இருந்தது தொடர்பாக அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இம்ரான்கான் தலைமறைவாகியுள்ளார். அவரது வீட்டிற்கு மங்களூர் தனிப்படையினர் சென்றனர். வீடு பூட்டி இருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாரின் உதவியுடன் மங்களூரு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: