50 ஆண்டுக்கு முந்தைய கல்லூரி சண்டை வீதிக்கு வந்தது எனது குழந்தைகளை கடத்த திட்டமிட்டார்: கேரள காங். தலைவர் மீது முதல்வர் பினராய் பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் எனது 2 குழந்தைகளையும் கடத்த திட்டமிட்டார்,’ என இம்மாநில முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணூர் எம்பி சுதாகரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர் நாட்களுக்கு முன் ஒரு மலையாள வார இதழுக்கு அளித்த பேட்டியில், ‘கண்ணூர் மாவட்டம் பிரண்ணன் கல்லூரியில் 50 ஆண்டுக்குமுன் பிஏ படித்தேன். முதல்வர் பினராய் விஜயனும் அங்குதான் படித்தார். ஒருநாள் கம்யூனிஸ்ட் மாணவர் சங்கத்தினர் கல்லூரியை புறக்கணித்து போராட்டம் நடத்த தீர்மானித்தனர். அதை தோற்கடிக்க நாங்கள் முடிவு செய்தோம். கலவரம் ஏற்படுத்த வந்த கம்யூனிஸ்ட் மாணவர் சங்கத்தினரை நாங்கள் விரட்டியடித்தோம். அப்போது அங்கு வந்த பினராய் விஜயன், என்னை பார்த்து, ‘நீ யாரடா தாராசிங்கா?’ என்று கேட்டார். இதனால் கோபமடைந்த நான் ஓங்கி உதைத்தேன். அவர் கீழே விழுந்தார். அவரை எங்களின் மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களும்  தாக்கினர்.  

போலீசார் வந்துதான் அவரை மீட்டுச் சென்றனர்,’ என்று கூறினார். இது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றி முதல்வர் பினராய் விஜயன் நேற்று கூறுகையில், ‘‘நான் பிரண்ணன் கல்லூரியில் தேர்வு எழுத சென்றபோது மாணவர் போராட்டம் நடந்தது. இதனால், தேர்வு எழுத வேண்டாம் என்று தீர்மானித்தேன். இதற்கிடையே, காங்கிரஸ்-  கம்யூனிஸ்ட் மாணவர் சங்கத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது  சுதாகரனும் அதில் இருந்தார். அதற்கு முன்பு எனக்கு அவரை தெரியாது. என்னை  தாக்க வந்தார். ஆனால், நான் அவரை விரட்டி அடித்தேன். என்னை அவர் உதைத்ததாக கூறுவது, கனவாக இருக்கலாம். நான் படிப்பை முடித்த பின்னர் ஒருநாள் சுதாகரனின் நெருங்கிய நண்பரான காங்கிரஸ் தலைவர் ஒருவர் வந்து, ‘சுதாகரன் உங்களின் 2 குழந்தைகளையும்  கடத்த திட்டமிட்டு இருக்கிறார். உஷாராக இருங்கள்,’ என கூறினார்,’’ என்றார்.

* பினராய் கொலைகாரர்

பினராய் அளித்த பேட்டியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சுதாகரன் நேற்று எர்ணாகுளத்தில் அளித்த பேட்டியில், ‘‘கல்லூரியில் 1967ம் ஆண்டு பினராய் விஜயனுடன் மோதல் ஏற்பட்டது உண்மை. என்னிடம் பேட்டி எடுத்தவரிடம் நான் தனிப்பட்ட முறையில் மட்டுமே இதை கூறினேன். அதை பிரசுரிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு பிரசுரித்து விட்டார். நான் பினராயின் குழந்தைகளை கடத்த திட்டமிட்டதாக கூறுவது பற்றி, அப்போதே அவர் ஏன் போலீசில் புகார் செய்யவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன் தலசேரியில் வாசு என்ற ஜனசங்க நிர்வாகி கொல்லப்பட்டார். பினராய் விஜயன்தான் அவரை வெட்டினார். அந்த வழக்கில் அவர்தான் முதல் குற்றவாளி,’’ என்றார்.

Related Stories:

>