தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன் என மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி... திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என ராகுல் உறுதி!!

டெல்லி : காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். நேற்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் உட்பட 25 கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் டெல்லியில் அக்பர் இல்லத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இருவரையும் டெல்லியில் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு சால்வே அணிவித்த முதல்வர், புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது வலைத்தள பக்கத்தில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நானும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக மக்களின் நலனுக்கான காங்கிரஸ் கட்சி திமுகவுடன் ஒரு வலுவான மற்றும் வளமான அரசை கட்டி எழுப்ப இணைந்து பணியாற்றும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களையும், முன்னாள் தலைவர் சகோதரர் திரு. ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்துப் பேசினோம். முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டே தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்! ” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: