ட்விட்டருக்கு தடை விதிப்பது நோக்கமல்ல, விதிகளை பின்பற்றுவதே அவசியம்: ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய சமூக ஊடக கட்டுப்பாட்டு விதிகள் விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணக்கமற்ற சூழல் நிலவுகிறது. சமீபத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில ட்விட்டர் பயனர்கள் பதிவிட்ட சரிபார்க்கப்படாத கருத்துகள் விவகாரத்தில் அந்த நபர்கள் மற்றும் ட்விட்டர் நிறுவனம் மீது உத்தர பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதான் புதிய சமூக ஊடக விதிகள் அமலுக்கு வந்த பிறகு நாட்டிலேயே ட்விட்டர் மீது பதிவாகும் முதல் வழக்காகும். இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு இலக்கு வைப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விதிகளை மீறி ட்விட்டர் நிறுவனம் செயல்படக்கூடாது, என்று தெரிவித்தார். விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, அத்தகைய நடவடிக்கையை அரசு ஆதரிக்கவில்லை, என்று குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் எப்போதும் போல அதை செயல்படுத்தலாம். அவ்வாறு அந்த தளத்தில் பகிரப்படும் தகவல் குழு வன்முறை, கலவரம், கொலை, பெண்களை ஆபாசமாக காட்டுவது, பாலியல் ரீதியாக சிறார்களை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை பிரதிபலிப்பதாக இருந்தால், பிறகு அந்த வைரல் தகவல்கள் எங்கிருந்து ஆரம்பத்தில் பகிரப்பட்டது என்பதை அறியவே அரசு முற்படும். அது எல்லை தாண்டி இந்தியாவுக்கு வெளியே இருந்து சித்தரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் நுழைந்தால் இங்கிருந்து முதலில் அதை பகிர்ந்தது யார் என்பதை கண்டுபிடிக்கவே அரசு முனையும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Related Stories: