தமிழக இளைஞர்களுக்கு கேரள காட்டில் ஆயுத பயிற்சியா?: கொல்லம் அருகே தீவிரவாதிகள் ரகசிய முகாம் கண்டுபிடிப்பு..!!

திருவனந்தபுரம்:  கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகளின் ஆயுத பயிற்சி முகாம் ஒன்றை அம்மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில இளைஞர்களுக்கு பயிற்சி அளித்திருப்பது உறுதியாகி உள்ளதால் எல்லை பகுதியில் உஷார் படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநில எல்லை பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தமிழக கியூ பிரிவு போலீசார் கேரள காவல்துறைக்கு ஏற்கனவே தகவல் அளித்திருந்தனர். 

அதன் பேரில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கேரள வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீவிரவாத குழுவில் இடம்பெற்ற கேரள இளைஞர்கள் சிலரை உத்திரபிரதேச போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் ஆயுத பயிற்சி முகாம் நடத்தியது உறுதி ஆனது. 

இதையடுத்து கொல்லம் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கேரள மாநில தீவிரவாதிகள் ஒழிப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திங்கள் அன்று பதனபுரம் வனப்பகுதியில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் வயர்கள் சிக்கின. அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கொன்னி வனத்தோட்டத்திற்கு உட்பட்ட இடத்தில் செவ்வாய் அன்று காலையில் 96 ஜெலட்டின் குச்சிகளை கொன்னி வனத்தோட்டத்திற்கு உட்பட்ட இடத்தில் வனத்துறையினர் கைப்பற்றினர். 

அவை கொன்னி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஜெலட்டின் குச்சிகளின் மீது பேட்ச் எண்கள் ஏதும் இல்லை. 3 வாரங்களுக்கு முன்பாக தீவிரவாத குழு உறுப்பினர்கள் இந்த பகுதியில் நடமாடி இருக்கலாம் எனவும் அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சியை அளித்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

எனவே கேரள வனப்பகுதி முழுவதிலும் சோதனை நீடிக்கிறது. கேரள வனத்தில் செய்யப்பட்ட ஆயுத பயற்சி முகாமில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றிருப்பது உறுதியாகியுள்ளது. உ.பி. போலீசாரிடம் சிக்கிய கேரள இளைஞர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். 

இதுபற்றிய தகவல் தமிழ்நாடு உள்ளிட்ட  4 மாநில காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் செல்போன் தொடர்புகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories: