டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு: 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பயன் பெறும்

தஞ்சை: ககாவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தாண்டு 5.21 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறுவை சாகுபடிக்காக கடந்த 12ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். தற்போது மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் நாமக்கல், கரூரை கடந்து ேநற்று அதிகாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்தது.

இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்து, முக்கொம்பில் இருந்து தண்ணீர் 9,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது. இன்று காலை நிவவரப்படி கல்லணைக்கு வினாடிக்கு 7,500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி ஜூன் 16ம் தேதி(இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்றிரவு கல்லணை பாலம், கரிகால் சோழன் மணிமண்டபம், கரிகால் சோழன் சிலை, ஆய்வு மாளிகை, ராஜராஜ சோழன் சிலை, காவேரி அம்மன், அகத்தியர் சிலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.

இன்று காலை ஆய்வு மாளிகையிலிருந்து மேளதாளத்துடன் கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் உள்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயில் மற்றும் கல்லணை பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோயில், கருப்பண்ணசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் 9.25 மணி அளவில் கல்லணையிலிருந்து முறைப்படி காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு ஷட்டர் பொத்தான்களை அழுத்தி தண்ணீரை திறந்துவிட்டனர். பின்னர் ஷட்டர்கள் வழியாக சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீரில் விதை நெல் மணிகள், பூக்களை தூவினர். காவிரி, வெண்ணாறில் தலா 2,000 கன அடி, கொள்ளிடம், கல்லணை கால்வாயில் தலா 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Related Stories: