நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி : விரைவில் கைதாக வாய்ப்பு!!

சென்னை : நடிகை சாந்தினியை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கின் பின்னணி

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததுடன், தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை சாந்தினி காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கில் நடிகை செயல்படுவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். மணிகண்டனுக்கு, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகை ஆட்சேபித்து இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். திருமண வாழ்வு சிறப்பாக அமையவில்லை எனக் கூறியதாகவும், மூன்று முறை கருத்தரித்தபோது கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முந்தைய விசாரணையின் போது, பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும், காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் தரக்கூடாது என்றும் காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. காவல் துறையின் கோரிக்கையை ஏற்றும் சாந்தினியின் இடையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டும் நீதிபதி அமர்வு, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: