கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம், 14 மளிகை தொகுப்பு: இன்று ரேஷன் கடையில் கிடைக்கும்: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள், இன்று முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும்.   அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு கலைஞர் பிறந்த நாளில் 4000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின்  உறுதியளித்திருந்தார்.அதன் அடிப்படையில், கொரோனா நிவாரண தொகைக்கான முதல் தவணை 2000 வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம் 10ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் தவணையால் 99 சதவீதம் பேர் பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது ஜூன் மாதத்தில் 4196.38 கோடி செலவில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகைக்கான 2வது தவணை 2000 வழங்கும் திட்டம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய திட்டத்தை கலைஞர் பிறந்தநாளான கடந்த 3ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதனால் அரசுக்கு 844.51 கோடி செலவாகும்.இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை தொகை 2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பை 15ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

இதற்காக  11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரேஷன் கடை பணியாளர்கள் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் வழங்கினர்.அதன்படி, ரேஷன் கடைக்கு ஒரு நாளைக்கு 200 பேருக்கு வழங்கப்படும்.டோக்கனில் எந்த தேதி, நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க வர வேண்டும் என்று தெளிவாக எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.  டோக்கன் பெற்றவர்கள்,  15ம்தேதி முதல் ரேஷன் கடைக்கு வந்து அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை ₹2 ஆயிரம் மற்றும் 14 வகையாக இலவச மளிகை பொருட்களையும் வாங்கிச் செல்லலாம்.டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் இறுதி வரை பெறலாம்: அமைச்சர் தகவல்

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி:  முதல் தவணை 2 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்தநிலையில், இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதனுடன் அரசு அறிவித்த 14 வகையான மளிகை தொகுப்பும் வழங்கப்பட உள்ளது.இதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுவிட்டது. நாள் ஒன்றுக்கு 75 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளது. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை தொகுப்பை பொதுமக்கள் அவசரமின்றி இம்மாத இறுதிவரை பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி மளிகை தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். இதேபோல், நடமாடும் நியாய விலை கடைகள் மூலமாக பொருட்கள் விநியோகம் செய்ய முதலமைச்சரகை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்..

Related Stories: