மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துகளை சரிசெய்ய ரூ.85 லட்சம் ஒதுக்கீடு!: அமைச்சர் சேகர்பாபு தகவல்..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 85 லட்சம் ரூபாய் செலவில் கோவில் புனரமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது. 

தொடர்ந்து, கோயிலை புனரமைப்பதற்கான தேவபிரசன்னம் நிகழ்ச்சி இன்று தொடங்கிய நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இரண்டாவது முறையாக பகவதி அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். தேவபிரசன்னம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள் பின்னர் சாமி தரிசனம் செய்தனர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 85 லட்சம் ரூபாய் செலவில் பகவதி அம்மன் கோயில் புனரமைக்கப்பட உள்ளதாக கூறினார். ஊழியர்கள் அஜாக்ரதையால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்ததாக கூறிய அமைச்சர் சேகர்பாபு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

மாதத்தில் ஒருமுறையாவது கோயில் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்வேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பல மாவட்டங்களில் அறநிலையத்துறை இணை ஆணையர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

Related Stories:

>