சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியரின் பாலியல் விவகாரம் தொடர்ந்ததை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் மீது மாணவிகள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆன்லைனில் வரும் இந்த புகார்களை எல்லாம் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பல மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்தனர். அது தொடர்பான ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர். குறிப்பாக முன்னாள் மாணவிகள் பலரும் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்பது குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேநேரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் இதுதொடர்பாக சம்மன் அனுப்பி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளை அழைத்து விசாரணையும் நடத்தியது. ஆனால் அப்போது பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. டேராடூனில் அவர் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சையில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவிகள் நேரடியாகவே புகார்களை அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>