டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கரில் விவசாயிகள், குறுவை பாசனம் செய்வற்காக மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீரை திறந்து விட்டார். உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் நல்லபலன் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்கான தண்ணீர், சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் திறந்து விடப்படுகிறது. குறுவை, தாளடி, சம்பா என்று 3 பருவங்களில் நடக்கும் சாகுபடியில், குறுவைக்கு ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படும். அணை கட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் இதுவரை 17 முறை மட்டுமே, குறிப்பிட்ட நாளாள ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டும் ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 18வது முறையாக குறிப்பிட்ட நாளில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அணையின் வலதுகரையில், மேல்மட்ட மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டார். தொடர்ந்து, 8 மதகுகள் வழியாக பீறிட்டுச் சென்ற நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார். தொடர்ந்து, விவசாயிகளும், அமைச்சர்களும், அதிகாரிகளும் மலர் தூவி வணங்கினர். பின்னர், மேட்டூர் அணை கட்டமைப்பின் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை, முதல்வர் பார்வையிட்டார். துவக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட நீர், படிப்படியாக வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உரிய நாளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால்திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கடைமடை வரை செல்லும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ₹65.11 கோடி மதிப்பீட்டில், 647 இடங்களில் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி,

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அரசு கொறடா கோவி.செழியன், கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, சேலம்  கலெக்டர் கார்மேகம், எம்பிக்கள் பார்த்திபன், பொன் கவுதமசிகாமணி, செந்தில்குமார், சின்ராஜ், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், பாமக சதாசிவம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடந்து சென்று மக்களிடம் மனு பெற்றார்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சேலம் வந்தார். சேலம் அஸ்தம்பட்டி சுற்றுலா பயணியர் மாளிகையில் தங்கியிருந்த அவர் நேற்று காலை, மேட்டூருக்கு காரில் புறப்பட்டார்.

வெளியே வந்தபோது, ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களோடு நின்றிருந்தனர். காரில் இருந்து இறங்கி, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தூய்மை பணியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கொரோனா தடுப்பு பணியில் கவனமாக பணியாற்றவும், முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அவர்களிடம் அறிவுறுத்தினார். அந்த பகுதியில் திமுகவினரும், பொதுமக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பை ஏற்கும் வகையில் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றார். ஓரமாக நின்றிருந்த சிலர், கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் கொடுத்தனர். பின்னர், காரில் ஏறி மேட்டூர் புறப்பட்டார். அழகாபுரம் பகுதியில் சாலையோரம் பட்டதாரியான மாற்றுத்திறனாளி பெண் அருணாதேவி என்பவர், கோரிக்கை மனுவோடு நின்றிருந்தார். உடனே காரை நிறுத்தச்சொல்லி இறங்கிச்சென்று மனுவை பெற்றுக் கொண்டார். பின்னர் மேட்டூர்வரை 30 இடங்களில் பொதுமக்கள், கட்சியினர் சாலையோரம் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். பலரும் கோரிக்கை மனுக்களை அவரிடம் கொடுத்தனர்.

செயினை கழற்றி முதல்வரிடம்  வழங்கிய மாணவி

மேட்டூர் அருகே பொட்டனேரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களை பார்த்ததும் அவரது கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்தபடியே மக்களை பார்த்து கரம் கூப்பினார். அப்போது அங்கு நின்றிருந்த இன்ஜினியரிங் மாணவி சௌமியா(20), தனது கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் செயினை கழற்றி, கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக கூறி முதல்வரிடம் வழங்கினார். அவரை முதல்வர் பாராட்டினார்.

உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

மேட்டூர் அணை திறப்புக்குப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:  தமிழகத்தின் நிகர பயிரிடும் பரப்பளவு 60 சதவீதமாக உள்ளது. இதை 75 சதவீதமாக உயர்த்தும் இலக்கை 10 ஆண்டுக்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு, வழக்கமான அளவை விட காவிரிப்படுகையில் குறுவை சாகுபடி பரப்பு அதிகமானது. இதை ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் குறிக்கோள்.  காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை நான் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 மாவட்டங்களில் 647 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் 4,061 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட உள்ளது.

குறித்த காலத்தில் முடிப்பதற்காக 9 மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்வையிட விவசாய அமைப்புகள் மற்றும் உழவர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நீர் வளம் மேம்படும். இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சாகுபடியை கடந்து, உணவு உற்பத்தியில் தமிழகம் நிச்சயம் சாதனை படைக்கும் என்றார்.

3 நாளில் கல்லணைக்கு செல்லும்

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைமின்நிலையம், சுரங்க மின்நிலையம், செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை உட்பட 7 கதவணைகளிலும் மின்உற்பத்தி தொடங்கியது. அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 3 நாளில் கல்லணையை சென்றடையும். நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம்தேதி வரை, டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்மட்டம்  96.81 அடி

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் 1,181 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,178 கன அடியாக குறைந்தது. நேற்று முன்தினம் 96.80 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 96.81 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 60.78 டிஎம்சி.

Related Stories:

>