கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிகளை சுகாதார சேவை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலை குறித்த கவலை பெற்றோர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குழந்தைகள் மத்தியில் கொரோனா பாதிப்பை நிர்வகிப்பதற்கான சில புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் ஊசி போடக்கூடாது என மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ரெம்டெசிவிர் மருந்து போதுமான பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லாததால் குழந்தைகளில் செலுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் மத்தியில் HRCT இமேஜிங்கை பகுத்தறிவுடன் பயன்படுத்த மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், மார்பின் எச்.ஆர்.சி.டி ஸ்கேன் மூலம் பெறப்பட்ட கூடுதல் தகவல்கள் பெரும்பாலும் சிகிச்சை முடிவுகளில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை கிட்டத்தட்ட மருத்துவ நிலையின் தீவிரம் மற்றும் உடலியல் குறைபாட்டை அடிப்படையாகக் கொண்டவை.

நோய்த்தொற்றுகளின் அறிகுறியற்ற மற்றும் லேசான அறிகுறி கொண்ட குழந்தைகளில் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு தீங்கு விளைவிக்கும். இது கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. கடுமையான மேற்பார்வையின் கீழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிதமான பாதிப்பு மற்றும் மோசமான கொரோனா பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஸ்டெராய்டுகளை சுயமாக எடுத்துக்கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் சரியான நேரத்தில் மற்றும் சரியான அளவுகளில் ஸ்டெராய்டுகளை பயன்படுத்துவது மிக முக்கியம்.

குழந்தைகளில் நோய்த்தடுப்புக்கான சிகிச்சைக்கு ஆண்டிமைக்ரோபையல்கள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை என்றும் மிதமான மற்றும் கடுமையான பாதிப்பு உள்ள குழந்தைகளில் ஆண்டிமைக்ரோபையல்கள் பரிந்துரைக்கப்படக்கூடாது என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

அறிகுறியற்ற நிகழ்வுகளுக்கு,குறிப்பிட்ட மருந்துகள் என எதுவும் இல்லை. கொரோனாவுக்கு பொருத்தமான நடத்தைகளான முகக்கவசங்கள், கை சுகாதாரம், சமூக விலகல் ஆகியவற்றை கடைபிடிப்பதோடு சத்தான ஆகாரங்களை கொடுத்து வந்தாலே போதும் என அறிவுறுத்தியுள்ளது.

லேசான அறிகுறி கொண்ட குழந்தைகளுக்கு, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி நீங்க பாராசிட்டமால் 10-15 mg/kg/dose -ஐ 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம். சிறுவர்கள் மற்றும் இளம்பருவத்தில் உள்ள குழந்தைகளில் இருமல் பிரச்சனையை போக்க சூடான நீரில் வாய் கொப்பளித்தல் போன்றவற்றை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மிதமான மற்றும் கடுமையான அறிகுறிகளோடு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் குழந்தைகளில், ஆக்ஸிஜன் சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும்.

கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறியை உங்கள் குழந்தை உருவாகினால், தேவையான மேலாண்மை தொடங்கப்பட வேண்டும். மேலதிக பாக்டீரியா தொற்றுக்கான சான்றுகள் இருந்தால் ஆண்டிமைக்ரோபையல் வழங்கப்பட வேண்டும். உறுப்பு செயலிழந்தால் உறுப்பு ஆதரவு தேவைப்படலாம்.

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 நிமிட நடை சோதனை எடுக்கவும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. இருதய உடற்பயிற்சி சகிப்புத்தன்மையை மதிப்பிடுவதற்கான எளிய சோதனை தான் இது மற்றும் ஹைபோக்ஸியாவை போக்க பயன்படுகிறது. எனவே, குழந்தையின் விரலில் துடிப்பு ஆக்சிமீட்டரை இணைத்து, தொடர்ந்து 6 நிமிடங்கள் நடக்கச் சொல்லுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: