பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி வழங்கப்பட்டது தொடர்பான இறுதி அறிக்கையை அளிக்காதது ஏன்?: பெங்களூரு உயர்நீதிமன்றம் கேள்வி

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி வழங்கப்பட்டது தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கையை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக்க கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வந்த போது அவருக்கு சிறையில் விதிகளை மீறி பல சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. 

இதனை விசாரிப்பதற்காக கர்நாடக அரசு நியமித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார், 295 பக்கம் கொண்ட தனது அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் சசிகலா உட்பட  பரப்பன அக்ரஹார சிறையில் பல முக்கிய சிறை கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இதே புகார் தொடர்பாக 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த கர்நாடக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தற்போது வரை விசாரணையை முடிக்கவில்லை. 

இந்த வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக கேள்வி எழுப்பிய சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை அபே ஸ்ரீநிவாஸ் ஹோகா மற்றும் சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

 அப்போது இந்த வழக்கு குறித்து கடுமையான ஆட்சியபங்களை தெரிவித்த நீதிபதிகள், பல வருடங்களாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக இதுவரை இறுதி அறிக்கை அளிக்கப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் 2 மாதத்திற்குள் இந்த விவகாரம் தொடர்பாக இறுதி அறிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Related Stories:

>