சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டில் ரூ.100 கோடிக்கு முறைகேடு: விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தல்

சேலம்: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அவற்றை களைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனிடையே, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், பணி நியமனம், கட்டமைப்பு பணிகள், கொள்முதல் என ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, தனி கமிஷன் அமைத்து, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் கூறியதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், முறைகேடுகளும், விதி மீறல்களும் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டாக ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கூட கேட்காமல், தன்னிச்சையான ஊழல் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் சார்பில், யூஜிசி-யின் விதிமுறைகளை மீறியும், இடஒதுக்கீடு நடைமுறைகளை பின்பற்றாமலும் 150க்கும் மேற்பட்ட நியமனங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், உறுப்பு கல்லூரிகளுக்கு நிரந்த பணியாளர்களை நியமித்தனர்.

இதில்,3 முதல்வர்களின் நியமனம் தொடர்பான தணிக்கை தடை இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. பேராசிரியர்கள்,தொகுப்பூதிய பணியாளர்,தினக்கூலி பணியாளர்களின் நியமனம் தொடர்பான அறிக்கைகள் மாயமாகி பல ஆண்டுகள் ஆகியும், கண்டுபிடிக்கப்படவில்லை. இதுஒருபுறம் இருக்க, பழைய கட்டிடங்களை புதுப்பித்தலில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக, 12 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. ஒரு கோடியில் கட்டப்பட்ட கலையரங்கத்திற்கு, சமீபத்தில் ரூ.7.5 கோடிக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாஸ்துப்படி துணைவேந்தர் அலுவலகம் ரூ.1.50 கோடிக்கு புதுப்பிப்பு, மின் பராமரிப்பு என்ற பெயரில், சில ஆண்டுகளுக்கு போடப்பட்ட மின் ஒயர்களை மீண்டும் மாற்றியமைக்கும் பணி, சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டுதல், முகப்புத்தூண் அமைத்தல்,பழைய கட்டிடங்களை இடித்து மீண்டும் கட்டுதல் என தேவையற்ற பராமரிப்பு பணிகளுக்கு மட்டும் பல கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் புகைப்படத்துடன்,பார்கோடு விடைத்தாள் அச்சடிப்பில் கோடிக்கணக்கில் முறைகேடு, சமய, சமுதாய ரீதியாக பாகுபாடு காட்டுவது என அடுத்தடுத்து பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், அதிமுகவினரின் ஆதரவால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த நிதி முறைகேடு, ஊழல் மற்றும் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: