17 மாநில அரசுகளுக்கு ரூ.9,871 கோடி ஒதுக்கீடு: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன்  3வது தவணைத் தொகையாக ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நேற்று வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி ஒதுக்கப்படுவதாக  கூறப்பட்டுள்ளது. இந்த 3வது தவணையுடன் சேர்த்து மொத்தம், இந்த நிதியாண்டில் இதுவரையில் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.29,613 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை போக்குவதற்காக, மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியம் மாதத் தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த 17 மாநிலங்களுக்கு இந்த வருவாய் பற்றாக்குறை மானியத்தை வழங்கும்படி 15வது நிதி ஆணையம்  ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. இதில் தமிழகம் ஆந்திரா, அசாம், அரியானா, இமாச்சல், கர்நாடகா, கேரளா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் அடங்கும். தற்போது வழங்கப்பட்டுள்ள தொகையுடன், ஏப்ரல், மே மாதங்களையும் சேர்த்து தமிழகத்துக்கு இதுவரையில் மொத்தம் ரூ.551.01 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: