உளுந்தூர்பேட்டை தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சருடன் சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு

சென்னை:  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா கடந்த ஜனவரி 27ம்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார். கடந்த பிப்ரவரி 8ம் தேதி சென்னை வந்த சசிகலா, திடீரென தான் அரசியலை விட்டே விலகுவதாக  அறிவித்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து மீண்டும் தொண்டர்களிடம் சசிகலா பேசி வந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி நத்தாமூர்  கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் 1991ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலன்  மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக  இருந்த ஆனந்தனுக்கு தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட  வாய்ப்பு வழங்கினார்.

இதனை தொடர்ந்து சில ஆண்டுகள் எந்த பொறுப்புகளிலும்  இல்லாமல் இருந்த ஆனந்தனுக்கு விழுப்புரம் மக்களவை தொகுதியில்  நிற்க வாய்ப்பு அளித்தார். இதில் 15 வருட இடைவெளிக்கு பிறகு எம்பி ஆனார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் அவருக்கு எந்தவித  பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. மக்களவை மற்றும் சட்டமன்ற  தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவர் மனு கொடுத்தும், அதிமுக தலைமை  வாய்ப்பு கொடுக்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சி பணியில் இருந்து விலகி சென்னையில் குடும்பத்தினருடன் வசிக்கும் ஆனந்தனிடம் சசிகலா செல்போன் மூலம் பேசிய உரையாடல் நேற்று வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. இதுவரை சசிகலா, தொண்டர்கள் மத்தியில் பேசி வந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் பேசியது அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருவரும் பேசிய ஆடியோ வருமாறு:

சசிகலா:  ஹலோ ஆனந்தன் நல்லா இருக்கீங்களா?  

ஆனந்தன்: வணக்கம்மா..  வணக்கம்மா... நல்லா இருக்கேன். நீங்க நிச்சயமா மீண்டும் வரவேண்டும்.

சசிகலா:  நிச்சயமா தொண்டர்களின் உருக்கமான கடிதங்களை பார்த்து தான் அனைவருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன், தலைவர் காலத்திலும், அதன் பிறகு ஜெயலலிதா காலத்திலும் கட்சி எப்படி இருந்ததோ அதே போல் கட்சியை மீண்டும் கொண்டு வருவோம், இந்த கட்சி நம் கண்ணுக்கு முன்னே இப்படி ஆவதை பார்க்கும் போது மனசுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எல்லோரும் சேர்ந்து சிறப்பாக செயல்படுவோம்.

இவ்வாறு சசிகலா பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சசிகலா, இதுவரை 9 தொண்டர்களிடம் பேசி ஆடியோ வெளியான நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஒருவரிடமும் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நேற்று மட்டும் சசிகலா 4க்கும் மேற்பட்ட அதிமுக பிரமுகர்களிடம் போனில் பேசியுள்ளார்.

Related Stories: