ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு பெரியாற்று தண்ணீர் வருவது எப்போது-முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிபட்டி :  ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு பெரியாற்று தண்ணீரை கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மூலவைகை ஆற்றில் மழைக்காலங்களில் வரும் கூடுதல் தண்ணீரையும், முல்லைப்பெரியாற்றில் வரும் உபரிநீரையும் இணைத்து குழாய் மூலம் கொண்டு வந்து, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 21 குளங்கள் மற்றும் 300 ஊரணிகளில் நிரப்பி, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரத்னவேல், ஜகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் பொதுப்பணித்துறை செயலர் 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து திட்டத்திற்கு ஆய்வு செய்து முதற்கட்ட அறிக்கை சமர்பித்தனர். அதில், கம்பம் குள்ளப்பக்கவுண்டன்பட்டி தடுப்பணையில் இருந்து ஆண்டிபட்டி பகுதிக்கு ரூ.317 கோடியில் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தயார் செய்து, சென்னை தலைமைப் பொறியாளருக்கு பரிந்துரைத்தனர். ஆனால், அப்போதைய அதிமுக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

பின்னர் இந்த திட்டத்திற்காக பொறியாளர்கள் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுடன் மீண்டும் ஆய்வு செய்தனர். இதில், குழாய் மூலம் தண்ணீரை கொண்டு வரும் தூரம், எவ்வளவு அளவு தண்ணீர், தண்ணீரை கடத்தும் குழாயின் விட்டம், தொழில் நுட்ப விபரம், தற்போதைய விலை நிலவரப்படி தயாரிக்கப்பட்டு ரூ.256.30 கோடியில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அனுப்பினர். அரசின் ஒப்புதலுக்காக இந்த திட்டம் காத்திருக்கிறது.

இந்நிலையில் புதிதாக பொறுப்போற்றுள்ள திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதில், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள இந்த திட்டம் குறித்து விரைவில் முதலமைச்சர் அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்பில் உள்ளனர்.   

Related Stories: