சீர்காழி, கொள்ளிடத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை-2 மணி நேரம் கொட்டி தீர்த்தது

சீர்காழி : சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இம்மழையால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக பழக்கடைகள், பூக்கடை, மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. திடீர் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. குறுவை சாகுபடி செய்த நெற் பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்குமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த மக்களுக்கு இம்மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளிடம்:

கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசான காற்றுடன் தூறல் ஆரம்பித்து, தொடர்ந்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடைவீதி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகமாக வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது.

கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி பஞ்சு அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று பெய்த மழையினால் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள எள் பயிர் இந்த மழையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் நிலத்தை கோடை உழவு செய்து வருகின்றனர். தண்ணீருக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு தற்போது பெய்த மழை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: