திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்: தமிழக-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தை சேர்ந்த 2 பேர் தாளவாடி மலைப்பகுதிக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். கார் திம்பம் மலைப்பாதையில் உள்ள 24வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை கம்பீரமாக படுத்திருந்ததை காரில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரை நிறுத்தி தடுப்பு சுவரில் படுத்து இருந்த சிறுத்தையை செல்போனில் வீடியோ எடுத்தனர். கார் அருகே நின்று முகப்பு விளக்கு வெளிச்சத்தை காட்டி செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை கண்ட சிறுத்தை சிறிதும் அச்சமடையாமல், அசையாமல் தடுப்பு சுவரின் மீது படுத்திருந்தது.

இதையடுத்து காரில் சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த பின் புறப்பட்டுச் சென்றனர். சிறிது நேரம் தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories: