டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்

புதுடெல்லி: இரண்டு முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சோதனையானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதற்கான அனைத்து சோதனைகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.அதன் படி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியினை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான சோதனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று தொடங்கியது.

இந்தப் பரிசோதனையானது 525 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்படும். சுமார் 28 நாள் இடைவெளியில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை என தடுப்பூசி செலுத்தப்பட்டு தொடர்ந்து அந்த குழந்தைகளும், சிறுவர்களும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என பாரத் பயோடக் நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதன் அடிப்படையில் சோதனை முடிவுகள் வெளியிடப்படும். இந்திய மருந்துகள் தர நிர்ணயம் அமைப்பு கடந்த மாதம் 12ம் தேதி இந்த பரிசோதனைக்கான அனுமதியை வழங்கியிருந்தது. ஏற்கனவே பீகாரின் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த பரிசோதனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: