மே.வங்க சட்டம் ஒழுங்கு பற்றி இன்று நேரில் விளக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் உத்தரவு:'கொலைகள் அதிகமாகி விட்டதாக குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும்  மோசமாக இருப்பதாக கூறி, நேரில் விளக்கம் அளிக்கும்படி தலைமை செயலாளரை ஆளுநர் அழைத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடியின் ஆய்வு கூட்டத்தை புறக்கணித்தது ம்ற்றும் தலைமை செயலாளர் மாற்றத்தில் மோதியதால் மம்தாவின் பக்கம் அரசியல் பார்வை திரும்பி உள்ளது. அதேபோல், மம்தாவுடன் ஆளுநர் ஜெகதீப் தனகாரும் தொடர்ந்து மோதி வருகிறார். பிரதமர் மோடியின் கூட்டத்தை புறக்கணித்ததற்கு மம்தாவின் ‘ஈகோ’தான் காரணம் என்று சமீபத்தில் விமர்சித்தார். இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து ஆளுநர் தன்கார் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மிகவும் ஆபத்தான, மோசமான நிலையில் உள்ளது. திரிணாமூல் கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களை காவல் துறை மூலம் ‘பழிவாங்கும் வன்முறை’ நடக்கிறது. பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும் நடந்து வருகின்றன. இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை நாளை (இன்று) நேரில் வந்து விளக்கும்படி தலைமைச் செயலாளர் எச்.கே.திவேதிக்கு உத்தரவிட்டு உள்ளேன்,’ என கூறியுள்ளார்.

மத்திய குழு ஆய்வு

வங்கக் கடலில் கடந்த மே 24ம் தேதியன்று யாஸ் புயல் உருவானது. ஒடிசா, மேற்கு வங்கத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி விட்டு மே 26ம் தேதியன்று கரை கடந்தது. அப்போது, இரு மாநிலங்களிலும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், புயல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய ஆய்வுக்குழு நேற்று மேற்கு வங்கம் சென்றது. உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் தலைமையில் சென்றிருக்கும் இந்த குழு, மூன்று நாள் ஆய்வு செய்ய உள்ளது.

Related Stories: