புற்றுநோயால் கொல்கத்தாவில் சிகிச்சை பெறும் பூடான் பெண்ணுக்கு 70 ‘யூனிட்’ ரத்தம் தானம்: ஏற்பாடு செய்த ராஜஸ்தான் மருத்துவ அதிகாரியின் மனிதநேயம்

ஜெய்ப்பூர்: புற்றுநோயால் கொல்கத்தாவில் சிகிச்சை பெறும் பூடான் பெண்ணுக்கு 70 ‘யூனிட்’ ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்த ராஜஸ்தான் மருத்துவ அதிகாரியை பலரும் பாராட்டி வருகின்றனர்.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தலைமை மருத்துவ சுகாதார அலுவலக மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ் மிஸ்ராவுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் பூடானை சேர்ந்த ஒரு பெண் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அதில், ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனது தாய்  பாபி மாயா திகாத்ரி (56) கொல்கத்தா நகரின் ராஜர்ஹாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மேல் சிகிச்சைக்காக சுமார் 70 யூனிட் பிளாஸ்மா (ரத்தம்) தேவைப்பட்டுகிறது.

கொல்கத்தாவில் சிகிசசை பெற்று வரும் அவருக்கு, பூடான் நாட்டை சேர்ந்தவர் என்பதால், பெரும்பாலும் யாரும் ரத்தம் கொடுக்க முன்வர மாட்டார்கள். எனவே, எனது தாய்க்கு தாங்கள் உதவ வேண்டும்’ என்று கோரினார். இதுகுறித்து டாக்டர் சதீஷ் மிஸ்ரா கூறுகையில், ‘கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளை ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். எனது சமூக வலைதள பக்கத்தில், பூடான் நாட்டை சேர்ந்த பெண் ஷெரிங் ஷோமோ என்பவர், புற்றுநோய் பாதித்த தனது தாய்க்கு 70 யூனிட் ரத்தம் தேவை என்பதால், தாங்கள் உதவ வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த பதிவை பார்த்து, என்னால் அன்றிரவு தூங்க முடியவில்லை.

காரணம், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பூடானை சேர்ந்த அந்த பெண்ணுக்கு, கொல்கத்தாவில் இருப்பவர்கள் எந்தளவிற்கு ரத்த தானம் செய்ய முன்வருவார்கள் என்பதும் கேள்வியாக இருந்தது. இருந்தும் அந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று என் மனம் கூறியது. உடனே, பொதுநல ஆர்வலர் விக்ரம் தாதிச்சின் உதவியை நாடினேன். அவர், ரத்த தானம் செய்பவர்களின் பட்டியலைத் தேர்வு செய்தார். நாடு முழுவதும் ரத்த தானம் செய்பவர்கள் பற்றிய தகவல்களை அவர் சேகரித்து வைத்திருந்ததால், எளிதாக ரத்த தானம் வழங்குவோரை அடையாளம் காண முடிந்தது. ரத்தம் கொடுத்த விருப்பமான 60 நன்கொடையாளர்களைக் கண்டுபிடித்தோம்.

அதன் பின்னர், குறிப்பிட்ட ரத்த தான மையம் மூலம் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பல மையங்களிலும் ரத்தம் பெறப்பட்டது. அதன் விபரங்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் மூலம் அந்த பெண் நோயாளிக்கு ரத்தம் கிடைத்தது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். இவ்வளவு பெரிய உதவியை விக்ரம் தாதிச்சின் தான் செய்தார். அவருக்கும், கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

Related Stories: