கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டல், சலூன், சுற்றுலாத்துறையினருக்கு மேலும் 15,000 கோடிக்கு கடன் திட்டம்: கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில், வட்டி விகிதம் நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த மாதத்துக்கான நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்  தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் நேற்று அறிவித்தார். இதன்படி, ரெப்போ வட்டி எனப்படும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 4 சதவீதமாகவே நீடிக்கிறது. இதுபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. இதனால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இருக்காது.   கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த 9 மாதங்களுக்கான உபரி நிதியாக, மத்திய அரசுக்கு 99,122 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியது. இது பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டதைவிட ஏறக்குறைய இரட்டிப்பாகும்.  

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, கணக்கியல் ரீதியாகவே இந்த பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், உபரி நிதி தொடர்பாக ரிசர்வ் வங்கி தனது கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.  இதுபோல், கொரோனா பரவல் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள துறையினருக்கு கடன் வழங்க கூடுதலாக 15,000 கோடி ஒதுக்கீடு செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதியான மார்ச் 31ம் தேதி வரை கடன் பெற இது உதவியாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மே 5ம் தேதி 50,000 கோடி கடன் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.   இந்த திட்டத்தின் கீழ், ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், சுற்றுலா துறையை சேர்ந்த டிராவல் ஏஜென்டுகள், பயண ஏற்பாட்டாளர்கள், உள்ளிட்டோருக்கு இந்த திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் வழங்கலாம். இதுபோல், தனியார் பஸ் உரிமையாளர்கள், கார் பழுதுபார்க்கும் சேவையில் உள்ளவர்கள், வாடகை கார் இயக்குவோர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஸ்பா, சலூன், அழகு நிலையங்கள் வைத்திருப்போருக்கும் இந்த கடன் திட்டம் பொருந்தும்.

 இதுபோல், அரசு பங்குகள் கொள்முதல் திட்டத்தின் கீழ், 1.2 லட்சம் கோடி பங்குகளை வாங்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த  சூழ்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக  இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

வாரத்தின் எல்லா நாட்களிலும் என்ஏசிஎச் மூலம் பணம் அனுப்பலாம்

என்ஏசிஎச்  எனப்படும் தேசிய தானியங்கி கணக்கு தீர்வகம் மூலம், சம்பள பட்டுவாடா, டிவிடென்ட், வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. அரசு நேரடி மானியங்களும் இதே முறையில்தான் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. அதாவது, ஒரே நேரத்தில் பலருக்கு பண பட்டுவாடா செய்வதற்கு இந்த முறை உதவுகிறது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், வாரத்தின் எல்லா நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Related Stories: