ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை 10 சில்லரை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து: அமைச்சர் சா.மு.நாசர் அதிரடி

சென்னை: ஆவின் பால் லிட்டர் 3 விலை  குறைத்து ஆணை பிறப்பித்த நிலையில் உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 10 சில்லரை விற்பனையாளர்களின் உரிமத்தை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார். அதில் இரண்டாவதாக மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ₹3  வீதம் குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில்  கடந்த 16ம் தேதி துவக்கி வைத்தார். இந்த அரசாணைக்கு ஏற்ப அனைத்து  ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில்  ஒரு சில கடைகளில்  3 குறைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக விற்பனை செய்வதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில்  பால் வளத்துறை அமைச்சர்  சா.மு.நாசர் உத்தரவின் பேரில், ஆவின் மேலாண்மை இயக்குநர்  உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லரை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி கடந்த  21ம் தேதி 11 சில்லரை விற்பனை உரிமங்கள்   ரத்து செய்யப்பட்டன. மேலும் சிறப்பு குழு பல்வேறு இடங்களில் சோதனை செய்த போது 10 சில்லரை விற்பனை கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தது. அதன்படி சில்லரை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. மேலும் இதுபோன்று தவறுகளை சில்லரை விற்பனை உரிமையாளர்கள் செய்யும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: