எதுவும் வேணாம்டா சாமி டிரம்ப்பின் விரக்தி முடிவு

வாஷிங்டன்: சமூக வலைதளமே வேண்டாம் என்ற முடிவில் தனது கடைசி வலைதளத்தையும் நீக்கியுள்ளார் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப். அமெரிக்க அதிபராக இவர் பதவி வகித்த கடைசி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சமூக வலைதளங்களில் விதிமீறலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. அதிபர் தேர்தல் நேரத்தில் தவறான செய்தியை பதிவிட்டு வருவதாக, இவருடைய கணக்குகளை பேஸ்புக், இன்ஸ்டாக்ராம், டிவிட்டர் போன்ற முன்னணி வலைதளங்கள் நீக்கின. இதனால் தனக்கென்று ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அதில் தனது கருத்துகளை டிரம்ப் பகிர்ந்து வந்தார்.

‘ப்ரம் தி டெஸ்க் ஆப் டொனால்ட் டிரம்ப்’ என்ற அந்த பக்கத்தில், தனது அனல் பறக்கும் பேச்சுக்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். இந்நிலையில், திடீரென்று அந்த பக்கத்தையும் நீக்கியுள்ளார். இது குறித்து டிரம்பின் செய்தித் தொடர்பாளர் மில்லர் கூறுகையில், ‘‘இந்த வலைதளத்துக்காக நிறைய உழைத்தோம். ஆனால், தற்போது நடவடிக்கைகளை நிறுத்துகிறோம். திரும்பி செயல்படுத்தும் எண்ணம் இல்லை,’’ என்றார். ‘பேஸ்புக், டிவிட்டருக்குப் போட்டியாக சமூக வலைதளம் தொடங்குவதாக டிரம்ப் கூறியிருந்தாரே?’ என்ற கேள்விக்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்...’ என்று பதில் அளித்தார் மில்லர்.

Related Stories: