பதவிப் பிரமாணம் இன்றி நேரடியாக தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக மிஸ்ரா பதவியேற்பு

புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.எல்.தத்து கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்றார்.  இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், இப்பதவிக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா பெயரின் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தாலும், ஆதரவு எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அருண் மிஸ்ரா புதிய தலைவராக தேர்வு பரிந்துரை செய்யப்பட்டார். இதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுமதி அளித்தார். இதையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக மிஸ்ரா நேற்று பதவியேற்றார். வழக்கமாக ஜனாதிபதி தான் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். கொரோனா தொற்று அச்சம் காரணமாக பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மிஸ்ரா, புதிய தலைவர் பொறுப்பை ஏற்றார். இவருடைய பதவி காலம் மூன்று ஆண்டுகள்.

Related Stories: