காதலியை பார்க்க கள்ளத்தனமாக பாக். சென்ற ஐதராபாத் காதலன் மீட்பு: 30 மாதங்களுக்கு பின்னர் பெற்றோர் நிம்மதி

ஐதராபாத்: பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பாகிஸ்தான் காதலியை பார்க்க சென்ற ஐதராபாத் காதலன், 30 மாதங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த், தனது பாகிஸ்தான் காதலியை பார்ப்பதற்காக அந்நாட்டிற்கு எவ்வித விசாவும் இல்லாமல் திருட்டுத்தனமாக கடந்த 30 மாதங்களுக்கு முன் சென்றார். அவரை, அப்போது பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இருநாடு வெளியுறவு அதிகாரிகளின் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், 30 மாதங்களாக பாகிஸ்தானில் இருந்த பிரசாந்த், வாகா எல்லை வழியாக இந்திய அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கு நேற்று வந்து சேர்ந்தார். இவரை கண்டதும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வெளியுறவுதுறை அதிகாரிகள் கூறுகையில், ‘2017 ஏப்ரல் மாதம் ஐதராபாத்தை சேர்ந்த பிரசாந்த் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பேஸ்புக் நட்பு மூலம் பாகிஸ்தான் பெண்ணை காதலித்த பிரசாந்த், விசா, பாஸ்போர்ட் என்று எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல், பாகிஸ்தானுக்குள் குறுக்கு வழியில் நுழைந்துள்ளார்.

அவரது திட்டப்படி, தனது காதலியை பாகிஸ்தானில் இருந்து அழைத்துக் கொண்டு, ஈரான் மற்றும் துருக்கி வழியாக சுவிட்ஸ்சர்லாந்து நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், தங்களது நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். வெளிவிவகார துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், பாகிஸ்தானில் இருந்து பிரசாந்த் விடுவிக்கப்பட்டார்’ என்றனர்.

Related Stories: