சென்னையில் பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து கேந்திர வித்யாலயா பள்ளியிலும் பாலியல் சித்ரவதை!: பழைய மாணவிகள் 22 பேர் புகார்..!!

சென்னை: சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை அடையாறில் செயல்படும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா மேல்நிலை பள்ளியிலும் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக பழைய மாணவிகள் 22 பேர் புகார் அளித்துள்ளனர். அடையாறில் சி.எல்.ஆர்.ஐ. எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து 18 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி மீது பாலியல் புகார் விடுத்தது அடுத்து, தமக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதை குறித்து கேந்திர வித்யாலயா பள்ளியில் படித்த பழைய மாணவி, சமூக வலைத்தளத்தில் தமது மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதனை கண்ட மேலும் பல மாணவிகளும் இதுபோன்ற பாலியல் சித்திரவதையை தாமும் அனுபவித்ததாக பதிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 22 பழைய மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகாராக அளித்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சி.எல்.ஆர்.ஐ. பள்ளி முதல்வர் ராம பிரசாந்த், பாலியல் புகார் குறித்து விசாரிக்க 2 ஆசிரியர் மற்றும் சி.எல்.ஆர்.ஐ. முதன்மை ஆய்வாளர் அடங்கிய 3 நபர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

புகார் அளித்த பழைய மாணவிகளில் தற்போது 28 வயதுள்ள ஒரு பெண் அளித்திருக்கும் புகாரில், கேந்திர வித்யாலயா பள்ளியில் தமக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை விளக்கியுள்ளார். தமக்கு என்ன நடக்கிறது என்று விவரம் தெரியாத வயதில் ஆசிரியர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்து அவர் விரிவாக கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட மனக்காயத்தின் வலி, இன்னும் தொடர்வதாக அந்த பழைய மாணவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

Related Stories: