ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இலவச தடுப்பூசி முகாமை ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடத்தினர். இதில் 18 வயது முதல் 45 வயது  வரை உட்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்த முகாம் நேற்று காலை 9 மணியளவில் தொடங்கி பிற்பகல் 2 மணி அளவில் முடிவடைந்தது. முகாமிற்கு கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் இளம்பகவத், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பூபாலன் வரவேற்றார்.

முகாமிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி எம்எல்ஏ கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று 20 நாட்கள் ஆகிறது. அவருடைய எண்ணங்கள் எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி காப்பாற்றுவது என்பதுதான் அவருடைய நோக்கம். தற்போது நம் முதல்வர் கொரோனோ பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்து கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நம் உயிரை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நாம் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுகுறித்து நீங்கள் அக்கம் பக்கத்து வீட்டார் அனைவருக்கும் எடுத்துச் சொல்லி கொரோனாவை ஒழிக்க கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். என தெரிவியுங்கள். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

முன்னதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசுகையில், ` கொரோனாவை முறியடிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசிமட்டும் தான். தடுப்பூசி மட்டும்  தான் கொரோனாவை விரட்ட முடியும். முகாம்களில்  அனைத்து மக்களும் தடுப்பூசி போட வேண்டும். மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி வரை மட்டும் 55 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 20,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றார்.

முகாமில் ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி, லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சாந்தி கபிலன், ரோட்டரி சங்க தலைவர் சிவலிங்கம், திமுக மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, அப்துல்லா, வினோத், கிருஷ்ணன், நிர்மல் ராகவன், நகர பொறுப்பாளர் பூங்காவனம், தொழிலதிபர் பிஆர்சி ரமேஷ் பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Related Stories: