உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து 3 கைதிகள் தப்பியோட்டம்

பெரம்பூர்: வியாசர்பாடி போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது, வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), அஜய்குப்தா (22), ஜெகதீஸ்வரன் (20) என தெரியவந்தது.

 இதில் அஜித்குமார் 2010ல் வியாசர்பாடியில் கலையரசன் என்பவரை கொலை செய்த  வழக்கில் சிறார் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று மூன்றரை ஆண்டுகள் செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் இருந்ததும், அப்போதே அவன் சிறையில் இருந்து தப்பித்து வியாசர்பாடியில் தஞ்சமடைந்துள்ளான். அப்போது செம்பியம் உதவி ஆய்வாளர் பிரேம்குமார், அவனை பிடிக்க சென்றபோது கோடாரியால் பிரேம்குமாரை வெட்ட வந்தான். அதன் பிறகு போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது உள்பட அஜித்குமார் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

 இதேபோல், அஜய் குப்தா மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஜெகதீஸ்வரன் மீது 4 வழக்குகள் உள்ளன. இவ்வாறு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து நேற்று காலை விசாரிப்பதற்காக  போலீசார் முடிவு செய்தனர். நேற்று காலை ஒரே ஒரு உதவி ஆய்வாளர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அப்போது, அஜித்குமார் மற்றும் அஜய் குப்தா ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் சண்டை போட்டுக் கொண்டு அருகில் இருந்த கண்ணாடியை உடைத்து தங்களை குத்திக்கொள்ள போவதாக மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு விட்டு 3 பேரும் தப்பி சென்றனர். இதுபற்றி அறிந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா,  தப்பியோடிய மூவரையும்  உடனடியாக பிடிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணை கைதிகள் தப்பி ஓடியது எப்படி என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல் நிலையத்திலேயே சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 3 பேர் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்பெக்டர் மழுப்பல்

வியாசர்பாடியில்  சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக சதீஷ் என்பவர்  பணிபுரிந்து வருகிறார். நேற்று காவல் நிலையத்தில் இருந்து 3 கைதிகள் தப்பியோடியது  குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அந்த 3 பேர் மீது வழக்குகள் உள்ளதால், நான்தான் அவர்களை காவல் நிலையத்திற்கு வர வைத்தேன். அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை திருப்பி அனுப்பிவிட்டேன். தப்பியோடிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை,’ என கூறினார். பிறகு ஏன் காவல் நிலையத்தில் இவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளார்கள் என்று கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டார்.

Related Stories: