கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது உ.பியில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு

லக்னோ:  உத்தரப்பிரதேசத்தில் 600க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்படவுள்ளதாக அரசுஅறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக  அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 600க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில்  ஜூன் ஒன்றாம் தேதி முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறக்கலாம். வார இறுதி நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடு  தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

 கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும்.  அரசு துறைகள் முழு ஊழியர்களுடனும், இதர துறை அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடனும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது. தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி செய்வதை ஊக்கவிக்கலாம்.  விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில்  உதவி மையம் மற்றும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

அரசு பேருந்துகள் இருக்கைகள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி அதிக பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படுகின்றது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் செயல்படும். வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: