திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மனைவி காலமானார்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மனைவி நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி. அவரது மனைவி பரமேஸ்வரி (53). இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கு கொடுக்கப்பட்ட கீமோதெரபி  சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், நோயின் தன்மை மேலும் தீவிரமடைந்தது. இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மனைவி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில்  தங்கியிருந்து ராசா அவரை கவனித்து வந்தார். இந்நிலையில் பரமேஸ்வரியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் கடந்த 3 நாட்களாக  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான  நிலையில் இருந்து வந்ததாக கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில் நேற்று மதியம் ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ”பரமேஸ்வரி வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரிக்கு சிகிச்சை  அளிக்கப்படுகிறது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக  இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவை கேட்டு ஆ.ராசா கதறி அழுதார். இது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. பரமேஸ்வரி கடந்த 6 மாதமாக புற்றுநோய் பாதிப்பால் போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆ.ராசாவின் மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய  முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வாழ்விணையர் பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி  அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

திராவிட தத்துவத்தினை அரசியல்  பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும், தாழ்விலும்,  நெருக்கடிகளிலும், சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது  வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் பரமேஸ்வரி. அவரது மறைவு  ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களைப் பற்றி  ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்  ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இந்த துயரில் இருந்து மீண்டெழ,  உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப திமுக தோள் கொடுத்துத் துணை நிற்கும்.

Related Stories: